×

mSiren Smart ஆம்புலன்ஸ் போக்குவரத்து திட்டத்தை துவக்கி வைத்தார் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் கபில் குமார்..!!

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர், mSiren Smart ஆம்புலன்ஸ் போக்குவரத்து திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தியாவில் மாரடைப்பு உள்ளிட்ட மருத்துவ அவசர நிலையில் உள்ளவர்கள் மற்றும் சாலை விபத்தினால் படுகாயம் அடைந்தவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கிடைக்கப் பெறாததால், தங்கள் உயிரை இழக்கின்றனர்.

இந்த உயிரிழப்புகளுக்கு ‘கோல்டன் ஹவர்’ நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் செல்லாததே முக்கியக் காரணமாகும். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறை, சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுடன் இணைந்து ‘கோல்டன் ஹவர்’ சவாலை சமாளிக்க mSiren ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் கபில் குமார் சி சரத்கர் இன்று காலை, சேத்துப்பட்டு, பூந்தமல்லி சாலை, ஈகா சிக்னல் அருகே, mSiren ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதனால், கோல்டன் ஹவர் சவாலை எதிர்கொள்ளும் அவசரகால ஆம்புலன்ஸ்களுக்கு ‘கிரீன் காரிடாரை’ செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

mSiren சேவை எவ்வாறு வேலை செய்கிறது;

mSiren என்பது வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்புகளின் தொகுப்பாகும், இது கோல்டன் ஹவரில் நேரத்தைச் சேமிக்க உதவுகிறது. mSiren ஆனது ஸ்மார்ட் சைரன் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ‘கிரீன் காரிடார்’ நெட்வொர்க்கை உருவாக்குகிறது.

‘கிரீன் காரிடர்‘ அமைப்பின் செயல்பாடு பின்வருமாறு:

1. mSiren இயங்குதளமானது தகவல்களை “Transmitter” மற்றும் “Receiver” கொண்டுசெயல்படுகிறது.

2. Transmitter: ஆம்புலன்ஸில் இருக்கும் சைரன்களுக்கு “ஸ்மார்ட் சைரன்” சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சைரன் இயக்கப்படும் போதெல்லாம் இது ஒரு தகவலை வெளிப்படுத்துகிறது.

3. Receiver: போக்குவரத்து சந்திப்புகளில் mSiren Receiver என்ற சாதனம் தற்போதுள்ள போக்குவரத்து சந்திப்புகளில் உள்ள LED போர்டுகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.

4. போக்குவரத்துச் சந்திப்பில் இருந்து 200 மீட்டருக்குள் அவசரகால ஆம்புலன்ஸ் வரும்போதெல்லாம், சந்திப்பில் உள்ள mSiren அமைப்பு நிகழ்நேரத்தில் செயல்படுத்தப்பட்டு, LED போர்டில் ஆம்புலன்ஸ் உள்வரும் திசையைக் காண்பிப்பதன் மூலம் ஒலிப்பெருக்கியில் எச்சரிக்கை செய்வதன் மூலமும் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களும், வாகன ஓட்டிகளுக்கும் எளிதில் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் செயல்பட உதவுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ்களுக்கு உடனடியாக வழிவிட உதவுகிறது, இதன்மூலம் ஆம்புலன்ஸ் விரைவாக குறிப்பிட்ட மருத்துவமனைக்குச் செல்வதற்கும், ஆபத்தில் இருக்கும் உயிரைக் காப்பாற்றுவதற்கும் பெரிதும் உதவும்.

அவ்வாறு மருத்துவ அவசர ஊர்தி சிக்னலை கடந்தவுடன் VMS போர்டுகள் மற்றும் பொது அறிவிப்பு அமைப்பின் மூலம் சாலை பயனாளிகள் மருததுவ அவசர ஊர்திக்கு வழிவிட்டமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது காவேரி, ரேலா மற்றும் குளோபல் ஆகிய மூன்று தனியார் மருத்துவமனைகளில் 25 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 16 போக்குவரத்து சந்திப்புகளில் இச்சேவை இணைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 40 சந்திப்புகளுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை போக்குவரத்து காவல்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் போக்குவரத்து (தெற்கு) திரு.N.M.மயில்வாகணன், இ.கா.ப, போக்குவரத்து துணை ஆணையாளர்கள் திரு.சமே சிங் மீனா, இ.கா.ப, (கிழக்கு) திரு.சரவணன், இ.கா.ப (வடக்கு), திரு.இராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை-2), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

The post mSiren Smart ஆம்புலன்ஸ் போக்குவரத்து திட்டத்தை துவக்கி வைத்தார் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் கபில் குமார்..!! appeared first on Dinakaran.

Tags : mSiren ,Traffic ,Kapil Kumar ,CHENNAI ,Metropolitan Transport ,India ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் இசிஆரில் விபத்தை குறைக்க...